முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு, சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்த அகழ்வு பணி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நீதியான சர்வதேச பொறிமுறைக்குள் இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்து இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இறுதி யுத்தத்தின் போது, சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட, தங்களின் உறவுகளுடையதாக இருக்கலாம் என போராட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த எச்சங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி வருகின்ற நிலைமையில், குறித்த புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்பில் நீதியான முன்மொழிவுகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.