ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், ராஜபக்ஷக்களை காப்பாற்றவுமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ரணில் என்பதும் ராஜபக்ஷக்கள் என்பதும் இரண்டல்ல, அவர்களின் பயணமும் இரண்டல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழக் கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தான் ரணில் ராஜபக்ஷ அல்ல ரணில் விக்ரமசிங்க என ரணில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கும் நாய்க்குட்டியே எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது, பட்டைப்பகலில் மத்திய வங்கியை சூறையாடியவர், நாட்டின் ஆதனத்தை அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர், நாட்டை நாசமாக்கும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்த ரணில் விக்ரமசிங்கவை விரட்ட வேண்டும் எனத் தெரிவித்தே ராஜபக்சக்கள் தேர்தலில் வாக்குகளைச் சேகரித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தற்போது ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே ரணில் ஜனாதிபதியாகியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ரணில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக மக்கள் அதிருப்தியடைந்து பாரிய அதிர்வலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே இவ்வாறான எதிர்ப்புக்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும், மீண்டும் ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற நோக்கிலும் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் செயற்பாட்டை பரீட்சித்துப் பார்க்கும் மோசமான ஒரு நபராகவே இவர் இருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.