வடக்கு கிழக்கில் கடமையில் இருக்கும் சிங்கள பொலிஸார் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை, மாறாக பௌத்த பிக்குகள் கூறுவதையே நிறைவேற்றுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்கள் ஆகையால் இங்கு தமிழ் பேசும் பொலிஸாரே கடமையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிலும் பல்வேறு பேரவைகளிலும் 13இற்கு அப்பால் தீர்வைப்பெற்றுக்கொடுப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் பொலிஸ்துறை என்பது முன்னரே 13ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம், எனவே ரணில், தற்போது தான் ரணில் ராஜபக்ஷ அல்ல எனத் தெரிவிப்பதானது அவரின் இயலாமையை காட்டுக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருக்கும் 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றுமாறே நாங்கள் கோருகின்றோம். அதுமட்டுமன்றி, 13ஆம் திருத்தத்தில் என்ன விடயங்கள் இருக்கின்றன எனவும், நாடாளுமன்றில் மீண்டும் சட்டம் நிறைவேற்ற தேவையில்லை என்பதும் தமக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ரணில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றில் ஒப்புதல் பெறவேண்டும் எனத் தெரிவிப்பது, சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கு அச்சப்படுகின்றார் என்பதையே காட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ மற்றும் அநுர குமார ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே பொலிஸ் அதிகாரத்தை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாடாளுமன்றில் ஒப்புதல் பெறவேண்டும் எனக் கூறுவது அர்த்தமற்ற ஒரு கதை எனவும் குறிப்பிட்டுள்ளார்.