சிங்கப்பூர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கம்போடியாவுக்கான இரண்டு வார யாத்திரையை முடித்துவிட்டு கடந்த வாரம் சிங்கப்பூர் எயார் லைன்ஸ் விமானத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பியிருந்தார்.
அதே விமானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவும் பயணித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சை ஒன்றுக்காக சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் விமானத்தில் ஒன்றாகவே இலங்கை வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய பின்னரும் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என தெரியவந்துள்ளது.
இருப்பினும் கலந்துரையாடல் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இது வரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் அக்கட்சியின் தவிசாளர் கோட்டாபயவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.