வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது நகரில் ஏற்கனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாகவும், நகரில் உள்ள காணிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் எவ்வாறான நடவடிக்கையினை எடுப்பது என்று அபிவிருத்திகுழு தலைவரால் கோரப்பட்டதுடன், வவுனியா வர்த்தக சங்கத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி அரச காணியாக இருப்பதால் பிரதேசசெயலாளர் ஏன் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ஆளுநரால் கோரப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக நகரசபைக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை. அப்படியானால் வர்த்தக சங்கம் செய்தது தவறு நான் செய்தது பிழையா என்று தெரிவித்தார்.
எனினும் காணி பிரதேச செயலாளரின் கீழ் இருப்பதால் நீங்கள் கட்டடம் அமைக்க முன்னரே அதற்கான நடவடிக்கையினை எடுத்திருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட குழுக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
மேலும் இவ்வாறான அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்த ஆளுநர் ஏற்கனவே அமைக்கப்படிருந்த கட்டடங்களின் பெறுமதிக்கமைய அவர்களிடமிருந்து குத்தகையினை அறவிட்டு குத்தகை அடிப்படையில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.