மோடியை சந்திக்கத் தயாராகும் தமிழ்த்தேசியக் கட்சிகள்!

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான முயற்சிகள் எதனையும் எடுக்காது, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டுவருவதால், எதிர்காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான முயற்சிகளை வடக்கின் தமிழ் கட்சிகள் எடுக்க உத்தேசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர்ந்து வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு பல கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லையென்ற அதிருப்தியில் இக்கட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போதும், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தத்தை கொடுத்திருந்தார்.

ஆனால், நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் தெற்கில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்டுத்த கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

தமிழ் தரப்பின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இந்தக் கட்சிகளுக்கு இல்லையென கூட்டத்தில் கலந்துகொண்ட வடக்கின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக வெறும் பேச்சுவார்த்தைகள் மாத்திரம் இடம்பெறுமானால் அது பயனற்றதாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய பிரதமரை சந்திப்பதற்கான கோரிக்கை கடிதமொன்று கடந்த காலத்தில் அனுப்பியிருந்ததாகவும், தமது கோரிக்கை குறித்து இந்த சூழலில் அவர் பரிசீலிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேிரதமர் மோடியை சந்திப்பதற்கான கோரிக்கையை தாம் விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் காலம் என்பதால் சந்திக்க முடியாதென அவர் கூறியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுகள் இலங்கையில் பேசுபொருளாக உள்ளதால் அவர் தமிழ் கட்சிகளுடனான சந்திப்பு குறித்து கரிசனை கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே தாமும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான கோரிக்கையை எதிர்காலத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply