அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண், சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நகரமான சிக்காகோவில், சாலையோரமாக பட்டினியால் வாடிய நிலையில் இந்திய இளம்பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி என்ற அந்தப் பெண், இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயர் கல்வி கற்பதற்காக மிச்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராயிட் நகருக்குச் சென்ற அவர், தற்போது, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிக்காகோ நகரில், சாலையோரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பசியால் வாடிய நிலையில், மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்த சையதாவுக்கு ஒருவர் உணவும் தண்ணீரும் கொடுக்கும் காட்சிகள் சமூக ஊடகம் ஒன்றில் பகிரப்பட்டுள்ளன.
தன் பெயர் கூட சரியாக நினைவில் வராத அளவுக்கு பரிதாபமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சையதாவின் தாயான சையதா வஹாஜ் பாத்திமா, தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு இந்திய தூதரகத்தைக் கோரியுள்ளார்.
தன் மகளுடைய உடைமைகள் திருட்டுப் போய்விட்டதாகவும், மன அழுத்ததால் பாதிக்கப்பட்ட நிலையில், பட்டினியால் வாடிய நிலையில், தன் மகளை ஹைதராபாதைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.