அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
“அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் என்பன இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறைகளை கையாள்வதற்கும் எளிதாக்குவதற்கும் இன்றியமையாத கூறுகளாகும் என ஜனாதிபதி ரணில் தெளிவாகக் கூறினார்.
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் இருவருக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் இது தொடர்பாகப் பேசப்பட்டது.
அதிகாரப் பகிர்வு என்பது கூட்டாட்சி கட்டமைப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்பட்டன. அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.
அது ஒரு தனி இணைப்பு அல்ல. ஜனாதிபதி மற்றும் நாம் அனைவரும் அதை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உறுதிமொழி எடுத்துள்ளோம்.
அத்துடன் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.