தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, அதிகார பகிர்வு, உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், த.கலையரசன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வ கட்சிக் கூட்டம் இடம்பெற்ற போதிலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் அதில் எட்டப்படவில்லை.
எனினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தமிழ் கட்சிகள் வலியுறுத்திய போதிலும் ஜனாதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.