சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
பொலிஸ் அதிகாரங்களை தவிர 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு தும்முல்லை சம்புத்த ஜயந்தி விகாரையில் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஜகத் டயஸ், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.