இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை கச்சதீவை மீட்டுத் தருவதாகத் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை தேர்தலுக்காக தமிழக மீனவர்களை உசுப்பேற்றக் கூடாது என வலி வடக்கு சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அண்ணாமலை இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் கலந்துரையாடிய போது, இது தொடர்பில் இரு தரப்பு புரிந்துணர்வுடன் பிரச்சினைகளை கையாள்வோம் எனத் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொப்பிள்கொடி உறவுகளாக இருக்கும் நாம் முரண்பாடுகள் இன்றி, இந்திய இழுவைப்படகுகளை நிறுத்தி இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு வழி ஏற்படுத்தி தருவதாக கூறிச் சென்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது தேர்தலின் போது தமது வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக கச்சதீவை இந்தியாவிற்கு மீட்டுத் தருவதாக பிரசாரம் செய்கின்றார் என விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தேர்தலுக்காக அவர் கூறும் விடயங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்கள் அத்துமீறி நுழைந்து சூறையாடுவதைத் தடுக்காது, மக்களை திசை திருப்பும் வகையில் கச்சதீவை மீட்டுத் தருவதாக பிரசாரம் செய்கின்றார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலையின் இவ்வாறான கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.