விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மாதம்பை, கண்டி, நாத்தாண்டியா, மீதெனிய ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 30 முதல் 38 வயதானவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
நான்கு பேரும் நவீன ரக காரில் அன்டனாக்கள், பட்டரிகள், பட்டரி சார்ஜர்கள், உதிரிபாகங்கள், வெளிநாட்டு தயாரிப்பு ஸ்கேனர் என்பவற்றை எடுத்துச் செல்லும் போது கனகபுரம் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்து செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.