இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம் இந்த விமானம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கையில் பாவிக்கப்படும் டோர்னியர்-228 (Donier) விமானங்கள் பராமரிப்பிற்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படுவதுடன், அது வரை புதிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஜனவரி 9 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு புதுடெல்லியில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலின் போது, இந்தியாவில் இருந்து டோர்னியர் ரகத்திற்கு இணையான கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், கடல்சார் கண்காணிப்பில் இலங்கையின் திறன்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய அரசாங்கம் இந்த ஆலோசனைகளின் போது செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்தது.
இந்திய கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த டோர்னியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக இலங்கைக்கு வழங்க முடிவு செய்தது.
இதன் பிரகாரம் இந்த விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.