மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்கள வன்முறையாளர்கள் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதியன்று மயிலத்தமடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு, மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட வன்முறையாளர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடத்தப்பட்டுள்ளதோடு, கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களை அடக்குவதற்காக உதவிக்கு அழைக்கப்பட்ட பொலிசாரும் அடாவடியில் ஈடுபட்ட பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்ந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான பண்புகள் ,கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையையும் உருவாக்கி வருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.