பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – ரணில் பகிரங்கம்!

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரை ஜனாதிபதி, சந்தித்து கலந்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கும் போது, வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து மீண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தெரிவுடனும் தொழில்நுட்பத்துடனும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தலைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே தான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மத தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை தாம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், வடக்கில் குருந்தூர் விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அதனால் தாம் வெளியிலிருந்து அந்த பிரதேசத்திற்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பிலான விடயங்களை கண்டறியுமாறும், தொல்பொருள் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்திற்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அந்தப் பகுதிகளை பாதுகாக்கவும் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் தொல்பொருளியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply