சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு காரணமான அனைவரின் விபரங்களும் பகிரங்கப்படுத்த வேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தியே பொறுப்பேற்க வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமி ஒருவரின் கை உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமையினால் அகற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவராக விளங்கியதுடன் பரதநாட்டியத்திலும் திறமை உள்ளவராக காணப்பட்டார்.

இந்த சிறுமியின் கை அகற்றப்பட்டமையினால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சிறுமி வாழ்க்கை பூராகவும் பாரிய துன்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கு முழு காரணமான சம்பந்தப்பட்ட தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இனிமேலும் இவ்வாறு நிகழாமல் இருக்கும்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளராகவும் விளங்குகின்றார்.

இவர் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புகின்றார்.

ஒரு போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர் வைத்தியர் சத்தியமூர்த்தி மாகாணத்தில் ஒரு தவறு நடந்தாலும் அதற்கும் மாகாணரீதியில் பொறுப்பு கூற வேண்டியவர் சத்தியமூர்த்தியாகும்.

ஆனால் அண்மைக்காலங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி முல்லைத்தீவில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் நடக்கும் தவறுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் கிளிநொச்சியில் பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சத்தியமூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களை நியாயப்படுத்தும் வகையில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் மக்கள் இவரிடம் எவ்வாறு நியாயத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஒரு அரச நிறுவனம் ஒன்றில் ஒருவர் தொடர்ச்சியாக பணியாற்ற முடியாது ஆனால் இவர் தொடர்ச்சியாக தற்போது யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

இவ்வாறான நிலையில் இவருடைய காலத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

மாகாணத்திலும்,மாவட்டத்திலும் தகுதியான பலவைத்தியர்கள் இருக்கின்ற போதும் தொடர்ச்சியாக இவர் இந்த பதவியில் இருந்து வருகின்றார்.

இதனால் ஏனையவர் தகுதி இருந்தும் குறித்த பதவிக்கு வரமுடியாமல் இருக்கின்றது என அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply