நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ஆண்டுபூர்த்தி விழா நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய கல்வி முறைக்கான அவசியம் தோன்றியுள்ளது. அதற்கமைய அடுத்துவரும் 20 – 30 ஆண்டுகளுக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1989 இல், தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்து ‘அசோசியேட்’ பட்டம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அக்காலத்தில் இருக்கவில்லை.
அதனை தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கையை அரசியலுக்கு அடிபணிய இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவும் இடமளிக்க கூடாது எனவும் கல்விக் கொள்கையை சட்டமாக்கி அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.