ராஜபக்சர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தவரே கர்த்தினால் – அருட் தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு!

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

“சிங்கள பௌத்த தலைமைகளின் ஆசியோடு வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே மேற்கொள்கிறது.

இராணுவத்தின் துணையோடும், துணை இன்றியும் சிங்கள பௌத்த துறவிகளும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களையும் அரச துணை இராணுவ பிரிவாகவே அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

இதற்கு பின்னால் சிங்கள பௌத்த அரசியல் சதியே நிறைவேறி வருகின்றது.

இதன் நோக்கம் சிங்கள பௌத்த மயமாக்கலோடு தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்து அவர்களை கொதிநிலையில் வைப்பதுமாகும்.

தேவை ஏற்படின் மோதலுக்கு வழிவகுப்பதுமாகும். இதனை  வன்மையாக கண்டிப்பதோடு அதற்கு தொடர்ந்து இடம் அளிக்கக்கூடாது.

அதேபோன்று வேறு சமய மையங்கள், சமய தலைமைத்துவங்களின் இனத்துவ, மத துவேச கருத்துக்களுக்கும், கட்சி அரசியலுக்கும் இடம் அளிப்பதை அங்கீகரிக்க முடியாது.

அண்மையில் கொழும்பு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்தியா தொடர்பாகவும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழிப் பாதை தொடர்பாகவும் வெளியிட்ட கருத்து அவர் தமது கடந்த கால அரசியலுக்குள் இருந்து மீளவில்லை என்பதையே உணர்த்துகின்றது. கடந்த காலங்களில் ராஜபக்ச அரசியலை பாதுகாத்தவர்.

அவர்களை மீளவும் அதிகாரத்திற்கு கொண்டுவர துடித்தவர் தற்போது வேறு அரசியல் தளத்திற்கு தாவி அதனை பலப்படுத்தவும் அவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர முயல்வதாகவுமே தோன்றுகின்றது.

கர்த்தினாலின் கருத்து இந்திய எதிர்ப்பு வாதத்தோடு சிங்கள பொது இனவாதிகளுக்கு தீனி போட்டுள்ளதோடு வரலாற்று பிறழ்வையும் கொண்டுள்ளது எனலாம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழி பாதை அமைக்கும் முன்மொழிவை எதிர்க்கும் கர்தினால் அதற்கு தெற்கு மக்களின் விருப்பை கேட்க வேண்டும் என கூறுகின்றார்.

சீனா இலங்கையில் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி தனித்தீவை அமைத்து இருப்பதையோ, அம்பாந்தோட்டை துறைமுகத்தை தம் வசமாக்க துடிப்பதையோ, தமது இராணுவ ஆய்வு கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என்பவற்றை இலங்கைக்கு அனுப்புவதையோ, இலங்கை கடலில் நங்கூரமிடுவதையோ எதிர்க்கவில்லை ஏன்?

இதற்கெல்லாம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அபிப்பிராயத்தை அறியுமாறு கேட்கவில்லையே ஏன்?

தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க உத்தேசித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

ஆனால் 36 வருடங்களுக்கு முன்னர் இந்தியா வடக்கில் உணவு பொட்டலங்களை போட்ட நிகழ்வை நினைவுபடுத்தி பாரிய ஆபத்து என கொக்கரித்து சிங்கள பேரினவாதத்தை தூங்கா நிலைக்கு தள்ளியுள்ளார்.

இது அவரது தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கு கருத்தாகும். தான் விரும்பும் அரசியல் சக்தியை அடுத்த தேர்தலில் பதவியில் அமர்த்துவதற்கான கருத்து என்றே இதனை கூற வேண்டும்” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply