இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலை இடம்பெற்றிருக்காது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகிய பின்னர் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்று முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய அதே தரப்பினர் தான் ஈஸ்டர் படுகொலையை அரங்கேற்றினார்கள் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறு படுகொலை இடம்பெற்றிருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் ஆட்சிக் கதிரைகளுக்காக வேறு வடிவங்களிலும் இனப்படுகொலைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.