உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய ராஜபக்ஷ மறைத்ததைப் போன்று ரணிலும் மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் மறைத்தார்,இப்போது ரணிலும் மறைக்கின்றார். நாம் எப்படியாவது உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் .
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியினாலேயே தேர்தலில் அவருக்கு 69 இலட்சம் மக்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் நடந்ததோ வேறு.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை மறைக்கப்படுவதே வாடிக்கையாக உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் உள்ளது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது,தேசிய விசாரணைகள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.