உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த மூன்று முக்கிய விடயங்கள் படி, பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருதல், அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்தல், அரச வரி வருமானத்தை அதிகரித்தல் என்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.