பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த மனிதச் சங்கிலி போராட்டம் மருதனார் மடத்தில் காலை 09. 00 மணிக்கு ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது, ஓ.. சிங்க வம்ச சரத்தே ஈழத்தின் பூர்வீகக்குடி தமிழரே, சரித்திரத்தைப் புரட்டிப்பார் புரியும் உன் வம்சம், கை வைக்காதே கை வைக்காதே நீதித்துறையின் மீது கை வைக்காதே, புத்த தர்மம் அகிம்சையா? காடைத்தனமா?, நீதியே நாட்டை விட்டு ஓடினால் இது நாடா சுடுகாடா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப்போராட்டத்தில் மாபெரும் மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்து நீதி கோரிட திரண்டு வரவேண்டுமென தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் நேற்றைய தினம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுத்திருந்தன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புக்கள் விமர்சனத்திற்குள்ளாவதை, உரிய அமைச்சுக்களும் அமைச்சர்களும், ஜனாதிபதியும் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே குறித்த மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.