டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அனுமதியளிப்பட்டுள்ளது.
மீனவர்கள் பயன்படுத்தும் வழமையான உபகரணங்களை விட இவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட செயற்கைக்கோள் கருவி அதிநவீனமானது எனவும் சந்தேகநபர்கள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவருகிறார்களா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக நீதவானிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மூன்று சிம் அட்டைகள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் மேலதிக நீதவானிடம் அறிவித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், அவை தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.