இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சேவையை இணைய வழியாக இந்திய பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும் இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்காக இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நன்றி கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் இந்த கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் பயணிகள் படகு சேவையை இயக்குகிறது.
இந்தியாவில் இருந்து காலை பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பயணிகள் கப்பல், பிற்பகல் 02.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்பட உள்ளது.
இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாவும், ஒருவழி பயணத்திற்கு 27,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.