யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பொலிஸார் இராணுவத்தின் உதவியை நடுவதாக கூறியிருந்தார்.
குறிப்பாக இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக நிலை நிறுத்த அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா என்றும் கேள்வியெழுப்பினார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர், உயிரை பணயம் வைத்து தான் பொலிஸார் கடமையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதால் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.
நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சாட்டுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.