அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதேபோல், அஸ்வெசும வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரிகளை நியமிப்தற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
அத்தோடு அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய, வறுமையான மற்றும் மிக வறுமையான குடும்பங்கள் என்ற 04 கட்டங்களின் கீழ் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படுவதோடு, அங்கவீனமான, முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கும் வழமை போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.