மட்டக்களப்பில் மூடப்பட்டுள்ள 12 வைத்தியசாலைகள்!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று “வைத்தியர்களுக்கான பொருளாதார நியாயத்தை ஏற்படுத்துவோம், இலவச சுகாதார சேவையை பாதுகாப்போம்” என்னும் தொனிப்பொருளில் வைத்தியர்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்தபோதே வைத்தியர் தியாகராஜா தவநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

எனவே வைத்தியர்களின் வெளியேற்றத்தை தடுக்க அவர்களுக்கான பொருளாதார ரீதியான உறுதிப்படுத்தலை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

இலவச சுகாதார சேவையினை பாதுகாப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

நாட்டைவிட்டு வைத்தியர்கள் வெளியேறுதல், மருந்துகொள்வனவில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் காரணமாக இலவச மருத்துசேவையானது முடக்க நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இதற்கு தீர்வாக ஆறு தீர்வினை ஆறு மாதங்களுக்கு முன்னர் அரசுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கியிருந்தது.

அதற்காக பல்வேறு அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது.

ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உறுதியான நடவடிக்கையினை எடுக்காத நிலையில் இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமு் மாகாணம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது” என வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply