நாகொட களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர் மீண்டும் சுகவீனமடைந்து, பின்னர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த குறித்த நபரே பின்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இன்னும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கும் அனைத்து புதிய கைதிகளும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி விடப்படுவார்கள் என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி கடந்த வாரம் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததுடன், மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் மூளைக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.