கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் மல்வானையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான இவர் அரலகங்வில பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 10 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுன் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி அதிகாலையில் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரைக்குள் பௌத்த பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 45 வயதான பௌத்த பிக்கு வண.கலப்பலுவாவே தம்மரதன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை இம்மாத தொடக்கத்தில், குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மேலும் ஐந்து சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.