நாரம்மல பிரதேசத்தில் கொள்ளையர்கள் கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மேலும் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் இருந்து பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விளம்பரத்தைப் பார்த்து ருவன்வெல்ல பகுதிக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தில் உள்ள இடத்திற்கு வருமாறு கொள்ளையர்கள் தெரிவித்ததோடு, குறித்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் அவர்களது காரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட கைகலப்பின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.