ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கேற்ற ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான திகதி அறிவிப்பிற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அந்தந்த கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று (24) இரவு “வெற்றி பெறும் சஜித்” என குறிப்பிட்டு நாடளாவிய ரீதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரச்சார மற்றும் ஊடக பிரிவு இந்த பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்வரும் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.