கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்சவினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோர தீர்மானித்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எந்தவித விஞ்ஞான ரீதியிலான தீர்மானமும் இல்லாமல் எரிப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மிகவும் வேதனை அடைந்தது.
குறித்த சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி, தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் உண்மையில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக இருந்தால்.இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை தேடி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.
அதில் எவ்வித விஞ்ஞான ரீதியிலான அடிப்படையும் இல்லை. எனவே சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தில் இந்த தவறுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.