வரலாற்றுத் துரோகி வேலுகுமாருக்கு கண்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக் குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றப்படுகின்றார். என் உயிரினும் மேலான கண்டி மாவட்ட மக்களுக்கும் நமது கட்சிக்கும், இவர் செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாததாகும். 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கடும் இனவாத வன்முறையில் ஈடுபட்ட அந்த நபருடனேயே இந்த வேலுகுமார் இன்று சென்று சேர்ந்து கரங்கோர்த்துள்ளார். வேலுகுமாரின் கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.”

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டி. இந்தக் கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை என்ற வரலாற்று தேவையை நிறைவேற்றவே நான், என் சொந்த உயிரையும் பணயம் வைத்து, கடும் போராட்டத்தின் மத்தியில் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன். அந்தத் தேர்தலில் நான் தோல்வி அடையவில்லை. ஆனால், இனவாத வன்முறையால் எனது வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் எனது தேர்தல் பிரசார முகாமையாளராக இந்த வேலுகுமார் தொழில் செய்தார்.

நான் 2010 ஆம் ஆண்டு கண்டியில் போட்டியிட்ட போது எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டி மாவட்ட தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி கண்டி தமிழ் மக்களின் கண்களை அடுத்து வரும் ஆண்டுகளில் திறந்தது. அதையடுத்து நடைபெற்ற தேர்தல்களில், எமது கட்சியின் சார்பில் கண்டியில், வேலுகுமாரை போட்டியிடச் செய்து வெற்றி பெற வைத்தோம். கண்டி மாவட்ட வாழ் சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மனசார முன்வந்து இவருக்கு ஒரு விருப்பு வாக்கை வழங்கி எமக்கு உதவினார்கள்.

தற்போது என்ன நிகழ்ந்துள்ளது? 2010ஆம் ஆண்டு தேர்தலில் எமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட அந்த நபருடனேயே இந்த வேலுகுமார் சென்று சேர்ந்து கரங்கோர்த்துள்ளார். இதன் மூலம் இவரை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு சென்ற கட்சி, தலைமை, வாக்களித்த மக்கள் என அனைவரின் முகங்களிலும் இவர் கரி பூசியுள்ளார். இவரது கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. ரணில் விக்கிமசிங்க என்ற நொண்டிக் குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டிக் கழுதையே வேலுகுமார்.

இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் நிகழும் இத்தகைய துரோகங்களில், இது முதலாவதும் அல்ல. கடைசியுமாக இருக்கப்போவதும் இல்லை. ஆனால், இவர் இன்று செய்துள்ள செயல், மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். இந்த வேலுகுமார், வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் விழுந்து விட்ட குப்பை. இத்தகைய துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. மன்னிக்கக்கூடாது. எனது வரலாற்றில் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை. துரோகிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கின்றது.

கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்றுத் தருவோம். இவருக்குப் பாடம் கற்றுத் தருவதுடன், கண்டி மாவட்டத்தின் மீதான எமது உரிமையையும் நாம் நிலைநாட்டுவோம். எமது அரசு வெல்லும். எமது காலமும் வெல்லும். அரச பலத்துடன் கண்டியில் நாம் நிச்சயம் களம் இறங்குவோம். அப்போது வரலாறு திரும்பும்” – என்றார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply