![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/ss-1-796x445.png)
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றையதினம் மாலை 6 மணி வரை குறித்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ‘பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழி விடு’, ‘சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று’, ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் கட்சி ஆதரவாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.