![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/2182638-softdrinks1-796x445.webp)
பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய தந்தையும், மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
குளிர்பானம் அருந்திய நிலையில், தனது மகள் திடீர் சுகவீனமுற்றது கண்டு சிறுமியின் தந்தையும் அதே போத்தலில் இருந்து சிறிது குளிர்பானம் அருந்தியுள்ளார். அதனையடுத்து அவரும் சுகவீனமுற்றுள்ளார்.
இதனையடுத்து தந்தையும் மகளும் உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை வட்டாரங்கள் பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவித்த நிலையில், குறித்த குளிர்பான போத்தலை மேலதிக பரிசோதனைகளுக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.