இலங்கையில் திட்டமிடப்பட்ட காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு விலக முடிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்டவையால் ஏற்படும் தாமதங்களைக் காரணம் காட்டி இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளதுடன், இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என்றும், இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்களுக்காக இலங்கை அரசாங்கம் விரும்பினால் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அதானி குழுமம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.