
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பூசா சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.