
நாட்டினுடைய தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்து ஓரிரு நாட்களிலேயே கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் இன்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.
உயிரிழந்தவர் யாராக இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது, பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டிற்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இத்தகைய கொலை சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் நாட்டில் தற்போது நிகழும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.