கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்- வெளியான தகவல்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் புத்தளம் பாலவிய பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்ததாகவும், அதில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டை ஒன்றும் உள்ளடங்கி இருந்ததாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர், முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகவும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணும் உறுதுணையாக இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர், அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய சந்தேக நபர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது.

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சுமார் 6 கொலைகளில் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply