சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னரே இந்த விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனம் (ஜேமர்) சேர்க்கப்படவுள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜேமர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டிடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாகத் துண்டிக்க முடியவில்லை என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஜேமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜேமர்களின் குறைபாடுகள் காரணமாக, கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளியாட்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் அதிகரித்துள்ளதோடு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி போதைப்பொருள் வலைப்பின்னல்களையும் குற்றங்களையும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக உயர்மட்ட சந்தேக நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பூஸா போன்ற சிறைகளில், அவ்வப்போது கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், இவ்வாறான குற்றங்களில் இருந்து தடுப்பதற்காக சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply