
அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இன்று முதல் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவிக்கையில், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்களாக உள்ளனர் என்று கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.
பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளதால் பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நெவில் விஜேரத்ன கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், இரவு நேர முறைமைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.