
கிளிநொச்சி பகுதியில் விளையாட்டு பயிற்றுநர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம், கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் நபரொருவர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், அவரிடம் விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரை அவர் தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்களின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதன்பின், நேற்றைய தினம் (11) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே, விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.