
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மனோஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர், அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை தலைக்கவசத்தால் தலை மற்றும் முதுகு பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த மாணவன், பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தமையாலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடிய காரணத்தாலும் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த பல்கலை மாணவன் வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.