
மறு அறிவித்தல் வரும் வரை ஸ்ரீ தலதா காட்சியைப் பார்வையிடுவதற்குகாக, கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து பொது மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விழா இடம்பெற்று வரும் நிலையில் ஏற்கனவே அங்கு 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கண்டி வருவதனை தவிர்க்குமாறு பொலிஸாரும் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய மத்திய மாகாண மூத்த பொலிஸ் அதிபர் லலித் பத்திநாயக்க, ஸ்ரீ தலதா காட்சியைப் பார்வையிடுவதற்குகாக வரிசைகள் மிக நீளமாக இருப்பதால், ஒரு நாளைக்கு 100,000 பேரை அனுமதித்தாலும் தற்போதைய எண்ணிக்கையை குறைக்க, குறைந்தது மூன்று நாட்கள் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காரணமாக, இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
எனவே தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு கண்டிக்கு பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.