படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், நீதி கோரி போராட்டமும்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்ற அதேவேளை, அவர்களின் படுகொலைக்கு நீதி கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவர்களின் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில், அஞ்சலி நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே பெருமளவான பொலிஸார் சீருடைகளுடனும், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் பெருமளவான புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பவற்றையும் எடுத்தனர்.

ஊடகவியலாளரான தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply