
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு பிளவுகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தனர்.
அதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடி கலந்துரையாடினர்.
இன்றையதினம் (15) அதிகாரத்தை நிறுவவுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் ஒன்றுகூடி முடிவெடுக்க இருந்த நிலையில், இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்காவிட்டாலும், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவும் போது எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.