
இலங்கை கடற்பரப்புக்குள், இந்திய மீனவர்கள் அதுமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்தையும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்றையதினம் (29) யாழ் நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அங்குள்ள மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்,
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிகை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குதுறை பிரச்சனை தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட வேளையில், அவை தொடர்பிலும் உரிய நடவடிகை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார் .
அத்துடன், நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.