
இன்று (01) சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் தொழிலாளர் தினம் மே 1ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி 18ம் நுாற்றாண்டில் வேகமெடுத்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 1 நாளில், 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக குரல்கள் எழுந்தன. இதில் குறிப்பிடத்தக்கது, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். இது ஆறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தது. அதில் 1 நாளில், 10 மணி நேரம் வேலை என்பதும் ஒன்று.
ஐரோப்பிய நாடான பிரான்சில் நெசவு தொழிலாளர்கள் 1 நாளில், 15 மணி நேரம் கட்டாயமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை எதிர்த்து 1834ல் வேலை நிறுத்த போராட்டம் வெடித்தது. இந்த கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரில் கட்டட தொழிலாளர்கள் 1856ல் முதன் முதலாக 1 நாளில், 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து போராடி வெற்றி பெற்றனர். உலக அளவில் இது மைல் கல்லாக அமைந்தது.
ஆசிய – ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி நடந்தது. அங்கு நேரங்காலம் இன்றி வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டதால் பெரும் துன்பம் அடைந்தனர். அங்கும் போராட்டம் வெடித்தது.
அமெரிக்க தொழில் நகரங்களில் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி மாபெரும் வேலை நிறுத்தம் 1886ல் துவங்கியது. இதில் 1,200க்கும் மேற்பட்ட நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலம் உலகை உலுக்கியது.
தொடர்ந்து, அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு உருவானது. இது எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி போராடியது.
அத்துடன் மே 1, 1886ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. உலகெங்கும் அந்த போராட்டம் பரவியது. நிலைகுலைந்த அமெரிக்க அரசு கோரிக்கையை 1890ல் ஏற்றது. இந்த வெற்றியை குறிக்கும் விதமாக மே முதல் நாள், தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.