
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை, உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இலங்கை நேரப்படி இன்று (06) காலை 7.40 மணியளவில் பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.
இந்த உரை இன்று உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.