மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம்- உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் அது குறித்த விபரிப்புக்களை பெறவும், சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த மாணவியின் மரணத்துக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர்.

குறித்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் ஊடகங்களில் பேசிய அவரது பெற்றோர், குறித்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள இரமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் கல்வி பயின்ற வேளையில் பாடசாலையில் கற்பித்த ஆண் ஆசிரியர் ஒருவரால் தமது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவத்துக்கு பின்னர் மாணவி வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு பின்னர் மாணவி கடுமையான
உள ரீதியான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளர்.

மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பு ஒரு தனியார் கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply